Tuesday 31 July 2012

மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?

எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும்
வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப்
புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
தற்செயலாக நான் படித்த, "மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்...
கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, "பிளேக்!' அந்த நோய் கண்டவர்களின் முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து
காணப்படும் தடிப்புகள். அதாவது, "ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, "பாக்கட் புல் ஆப் போசீஸ்' அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல,
இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், "போஸி' என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், "பிளேக்' நோயை விரட்டும் என்ற
நம்பிக்கையோடு!
மூன்றாவது அறிகுறி, "அ டிஷ்யூ... அ டிஷ்யூ...' ஏதாவது புரிகிறதா? அட... தும்மல் ஒலிங்க! அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால்,
"வி ஆல் பால் டவுன்!' இப்போது புரிந்திருக்குமே... ஆம்! அவர் விண்ணகத்திற்கு, "டிக்கட்' வாங்கியாயிற்று என்பது பொருள்.
இனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட,
200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா?
வெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு? கல்வியாளர்கள் கண் திறப்பரா!

மதம்

ஆன்மிகம் ஒரு வித்தியாசமான பார்வை

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வத...ு ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

FACEBOOK IMAGES






இந்தியாவிற்கு கல்வி அறிவை போதித்து ஆங்கிலேயர்களா ? ஓர் வரலாற்று உண்மை ....

இந்தியாவில் கல்வி என்பது பிரிட்டிஷாரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகளால்.இதுதான் இந்தியக் கல்வி பற்றிப் பெரும்பாலானோருடைய மனதில் கல்வெட்டுபோல் அழுத்தமாகப் பதிந்திருக்கும் வாசகங்கள். ஒரு பொய்யானது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தால் காலப்போக்கில் அது உண்மையாகிவிடும் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது.கொஞ்சம் தாராள மனம் கொண்டவர்கள் இந்தியாவில் கல்வி பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆனால், அது பிராமண, சத்ரிய, வைசிய சாதிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. அதிலும் பிராமணர்கள் மட்டுமே கல்வியின் முழுப் பயனையும் அனுபவித்து வந்திருந்தார்கள் என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்ட 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலைமை அதுதான் என்றாலும் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் அதை கண்டனத்துக்குரியதாகச் சொல்வார்கள். (ஆனால், உண்மையில், இந்தியாவில் அதற்கு முன்பு கல்வி, அனைவருக்கும் தரப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்). அந்த 17-18-ம் நூற்றாண்டுவரை இந்தியா உலகப் பொருளாதார வல்லரசாக இருந்துவந்திருக்கிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இருந்திருக்கிறது. தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. இலக்கியம், ஓவியம், இசை, கட்டடக்கலை போன்றவற்றில் உச்சத்தை எட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை..ஆனால், அந்த இந்தியாவானது கல்வி அறிவு இல்லாத தேசம். சாதி வெறிபிடித்த தேசம். பெண்ணடிமை நிறைந்த பகுதி. கணவன் இறந்ததும் மனைவியும் உடன் கட்டை ஏறிவிடுவார்கள். இந்தியா காட்டுமிராண்டிகள் வாழும் தேசம். யானை, பாம்பு, குரங்குகள் நிறைந்த நாடு. கிட்டத்தட்ட இந்தியாவை ஓர் விசித்திர பொருட்காட்சி சாலையாக, சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் போக்குதான் மேற்கத்தியர்களுக்கு இருந்தது. அப்படியான ஓர் இந்தியாவைத்தான் அவர்கள் விரும்பினார்கள். எனவே, அதையே அவர்கள் கண்டடையவும் செய்தார்கள். ஆனால், உண்மையான இந்தியா என்பது முற்றிலும் வேறானதாக இருந்தது.உடன்கட்டை ஏறுதல் தவறான நடைமுறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரிட்டிஷார் சொன்னதுபோல் அது அவ்வளவு அதிகமாகவோ நாடு முழுவதுமோ இருந்ததில்லை. அது இந்திய நாடு முழுவதும் இருப்பதாகவும், இந்து மதம் அதை நிர்பந்திப்பதாகவும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள் என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியது. ‘சில விதிவிலக்குகளைத் தவிர, அனைத்து ஹிந்துக்களும் (எந்தப் படிநிலையில் இருப்பவராக இருந்தாலும்) உடன்கட்டை ஏறுவதைப் புனிதமானது என்றே எண்ணுகிறார்கள்’ என்பதுதான் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்க அரசாணை பிறப்பித்த வில்லியம் பென்டின்க் பிரபுவின் கண்டுபிடிப்பாக இருந்தது. அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் தரவில்லை. அவருடைய இந்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், உடன்கட்டை ஏறுவதை உயர்வாக எண்ணும் மனோபாவம் இருந்தது என்பதுதான் தெரியவருகிறதே தவிர அதையேதான் அனைவரும் பின்பற்றினார்கள் என்று அல்ல. நாம் உயர்வாக நினைக்கும் அனைத்தையும் செய்வதில்லையே! அப்போதைய ஆவணங்களிலும் உடன்கட்டை ஏறுதல் மிகக் குறைவாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் இருக்கின்றன.இந்த சொற்ப எண்ணிக்கை என்பது மட்டுமல்லாமல் உடன்கட்டை ஏறுதல் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட விஷயம். அதை ஆணாதிக்கம் என்று மட்டுமே பார்ப்பது மிகவும் பிழையான பார்வை.
எதிரி மன்னனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட போரில் கொல்லப்பட்டுவிட்ட கணவனுடன் சேர்ந்து தீயில் இறங்குவது மேல் என்று நினைத்த ராணிகள் உண்டு. சுமங்கலிகளுக்குக் கிடைக்காத பாக்கியமாகப் பெண்கள் பெருமிதமாக நினைத்ததுண்டு...அனுமரணம் என்ற பெயரில் பழங்காலத்தில் ஒருவர் இறந்ததும் அவருடைய மனைவி மட்டுமல்லாமல், அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த உறவினர்கள், நண்பர்கள், பணியாட்கள் என பலரும் உடன்கட்டை ஏறியிருக்கிறர்கள். இன்றும்கூட கொள்கைக்காகவும் தலைவருக்காகவும் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. அரசியல்வாதிகளின் சுயரூபங்களும் பச்சோந்தித்தனங்களும் வெகுவாக அம்பலமாகிவிட்ட நிலையிலும் விசுவாசமான அப்பாவித் தொண்டர்கள் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் நிதானமாக ஆராய வேண்டிய ஒன்று. ஆனால், கலகம் செய்பவர்களையும் அடங்க மறுப்பவர்களையும் விட்ச் ஹண்டிங் என்ற பெயரில் தீயில் தள்ளி எரித்த பின்னணியில் இருந்து வந்த பிரிட்டிஷாருக்கு உடன்கட்டை ஏறுதல் ஒரு ஆணாதிக்கச் செயலாக மட்டுமே பட்டதில் வியப்பில்லை. ‘காட்டுமிராண்டிகளை ரட்சிக்க’ அவர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக அதை பூதாகரப்படுத்தினார்கள். அதுவே இன்று உண்மையாக நம்பப்பட்டுவருகிறது.விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றபோது, இந்தியத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பிறந்ததும் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவார்களாமே என்று அங்கிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். இந்தியா குறித்த பிழையான சித்திரம் எப்படி இத்தனை காலம் நிலைபெற்று வந்திருக்கிறது என்பதற்கான விடை தெரியவேண்டுமானால், இந்தியாவின் வரலாறாக நாம் படித்துவருவது யார் எழுதிய வரலாறை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டாலே போதும். கடந்த காலத்தைத் தெரிந்துகொள்வதன் நோக்கம் நிகழ்காலத்தை சீரமைத்து, வரும் காலத்தை வளமாக்குவதுதான். நேற்றைய இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது என்பது இன்றைய இந்தியாவை மேம்படுத்த உதவுமென்றால் அந்தவகை புரிதலையே ஏற்றுக்கொள்ளவேண்டும். நேற்றைய இந்தியா மிகவும் தவறானது என்ற பார்வை ஒருவேளை நாளைய இந்தியாவை மேம்படுத்த உதவும் என்றால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இரண்டின் நோக்கமும் நாளைய இந்தியாவை வளப்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.ஆக்குதல் அதுவே நோக்கம். அழித்தல் அல்ல; சீரமைத்தல் அதுவே இலக்கு. சீர் குலைத்தல் அல்ல. இதுதான் வரலாறு எழுதப்படுவதன் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவின் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.வரலாறு என்பதை, நடந்ததை நடந்த விதத்திலேயே பதிவு செய்யும் ஆவணம் என்று ஒரு வசதிக்காக வரையறுக்கலாம்.உலகில் பழங்காலத்தில் எழுதப்பட்ட எல்லா சமூக வரலாறுகளிலும் இப்படியான கற்பனை கலந்துதான் இருந்திருக்கிறது. எனவே, நமது வரலாற்று அணுகுமுறையைப் பற்றி விமரரிசிக்கும்போது அதே காலகட்டத்தில் உலகில் பிற பகுதிகளில் நிலைமை எப்படி இருந்தது என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் நம்மைப் பற்றி நாம் எழுதியதில் சுய பெருமிதம் கலந்து இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, நமது வரலாறு அந்தவகையில் அந்நியர்களின் வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.ஆனால், அந்நியர்கள் எழுதும் விஞ்ஞானபூர்வ வரலாறும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தகுந்ததல்ல. ஏனென்றால், அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் அவர்களுடைய அரசியல் நலனே வெளிப்படையாகவோ மறைவாகவோ பொதிந்து காணப்படும். ஆனால், நாம் அந்தத் தவறைத்தான் செய்கிறோம்.நம் முன்னே இரண்டு வரலாறுகள் உள்ளன. ஒன்று சுய பெருமிதமும் கற்பனையும் கலந்தது. இன்னொன்று அரசியல் உள்நோக்கம் மிகுந்தது. உண்மை என்பது இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. அந்நியர்களில் அரசியல் நோக்கம் இல்லாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் நம்மவர்களில் மிகைப்படுத்தாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் பார்த்து இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாகப் போக வாய்ப்புக் கிடைக்கும்.பசுவதை என்பது ஹிந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல…..மனம் போன போக்கில் பசுக்களை கொன்று குவித்த பங்களாதேஷிகள் இன்று தங்கள் குழந்தைகளின் பாலுக்காக அமெரிக்க நெஸ்ட்லே நிறுவனத்தின் பால் பவுடருக்காக தவம் கிடப்பது தெரியுமா ? இன்று முன் நிறுத்தப்படும் இயற்கை வேளாண்மைக்கு பசுதான் ஆதாரம் என்பதை நம்மாழ்வார், பாமையன் போன்ற இயற்கை விஞ்ஞானிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்……இன்று பல லட்சம் செலவு செய்து டிராகடர் வாங்கினால் அடுத்த வருடம் அது பாதி விலைக்கு கூட போகாது…..எந்த டிராக்டரும் குட்டி போடாது…….--

FACEBOOK IMAGES

மனதை பாதித்த கதைகள்

ஜன்னல்!
 
திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில், ஒரு கூடாரம் முளைத்திருந்தது; நிறைய பேரின் நடமாட்டமும் தென்பட்டது...
""பாமா... இங்க வந்து பாரு...'' என்று அவர் கூறியதும், மரக்கரண்டியுடன், அடுக்களையில் இருந்து ஓடி வந்த பாமா, மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். முகத்தில், சன்னமாய் ஆச்சரிய ரேகையும், மெல்லிய புன்னகையும் தோன்றியது.
""அடடே... யாருங்க இவங்க...?''
""எதுக்கு இப்படி இளிக்கறே... காலையில இருந்து உள்ளுக்கும், நடைக்கும் ஒன்பதாயிரம் தரம் நடக்கறியே, நீ பார்க்கல?'' எரிந்து விழுந்தார்.
""ம்ம்க்கும்... எனக்கு அதுதான் வேலையா? அந்த காலிமனை யாருதுன்னு கூட தெரியாது. நாம இங்க குடி வந்து, மூணு வருஷமாய் பொட்டல் காடாத்தான் இருக்கு. அந்த இடத்தை காவல் பண்றது தான், என் வேலையா?''
பாமா போய் விட்டாள். அவளைப் போல், நடேசனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. அவருடைய, "சமூக பொறுப்புணர்வு' காலை வேளையில், நிச்சயம் சுறுசுறுப்பாய்த் தான் வேலை செய்யும்.
அரசுத் துறையில் உயர்வான வேலையில் இருந்து, 50 வயதில் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டார். அதுவும் ஆயிற்று, ஐந்து வருடங்களுக்கு மேல்! வியாசர்பாடியில் மகனும், நீலாங்கரையில் மகளும் வசதியாக வாழ்கின்றனர். ஓய்வூதிய பணத்தில், இந்த சொகுசு பங்களாவை வாங்கிப் போட்டார். நிறைய நேரம் கிடைப்பதால், எண்ணற்ற சமூகநல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.
பாமாவிற்கு அவர்களை நிறைய பிடித்திருந்தது. சிறிசும், பெரிசுமாய் நிறைய பேர் இருந்தனர். ஒரு நடுத்தர வயது தம்பதி; அவர்களுடைய மகன், மகள், பேரப் பிள்ளைகள் போல் தோன்றியது பார்ப்பதற்கு.
மரத்தடியில் பெரிய பானையில் சமைத்தனர். கோணி மீது காய்கறிகளைப் போட்டு, அரிவாள்மனையில் அரிந்தனர். மண்பானையில் வேக வைத்த குழம்பின் வாசம், மூக்கை துளைத்தது.
மாலை நேரத்தில், கூடார வாசலை கூட்டி கோலமிட்டு, நீர் தெளித்து, துப்புறவு செய்தனர். லாந்தர் வெளிச்சத்தில் சமைத்து, நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டனர். இரவு வெகு நேரம் சிரிப்பும், பேச்சுமாய் கழிந்தது.
அவர்கள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கின்றனர் என்பது கூட, இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆண்களும், பெண்களுமாய் அனைவரும் வேலைக்கு போய் விடுகின்றனர். ஓரிருவர் மட்டும், கூடாரத்தில், பகல் வேளையில் இருக்கின்றனர்.
""பாமா... அவங்க யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்...'' வீட்டிற்குள் நுழையும் போதே, பத்து வயது குறைந்த உற்சாகத்தில் உள்ளே வந்தார், நடேசன்.
""யாராம்?'' அசுவாரஸ்யமாய் கேட்டாள்.
""மெயின் ரோட்டை ஒட்டி ஒரு காலிமனை இருக்குல்ல... அத ஒட்டி ஒரு ரோடு போகுது. அங்க, ஒரு காலிமனையில தான், இத்தனை நாளும் இருந்திருக்காங்க... இப்போ, அங்கே கட்டட வேலை ஆரம்பமானதும், இவங்க இங்க இடம் மாறிட்டாங்க... இவங்களுக்கு, இப்படி இடம் விட்டு, இடம்விட்டு போறது தான் பொழப்பே...''
""அப்படியா... இதக் கண்டுபிடிச்சு நமக்கு என்ன ஆகப் போறது...''
""அடிப்போடி இவளே... நம்பளப் போல, சமூகப் பொறுப்புள்ள மனுஷனோட முதல் வேலை என்ன தெரியுமா... நம்மள சுத்தி நடக்குற மாற்றங்களை கண்டுபிடிச்சு, எந்தத் தப்பும் நடக்காம தடுக்கறது தான்... உன்கிட்ட போய் சொல்றேன் பாரு, தண்டம் தண்டம்.''
பாமாவிற்கு அவர்களிடம் எந்தத் தவறும் இருப்பதாய் தோன்றவில்லை. கள்ளம்கபடம் இல்லாமல் இருந்தனர். வாழ்க்கையை துளித்துளியாய் அனுபவித்து வாழ்கின்றனர். இரவானால், டிரான்சிஸ்டரில் அவர்கள் பாட்டுக் கேட்டு, சிரித்து விமர்சனம் செய்தபடி, தங்கள் வீட்டு சிறிசுகளை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது, அழகிலும் அழகு!
இதுபோன்ற அடிமட்ட மக்களிடம் இருக்கும் ஒட்டுறவு, தாத்பர்யம், தம்மைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்திடம் இல்லையென்ற அங்கலாய்ப்பு, அவளுடைய மனசில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது...
அன்று வெள்ளிக்கிழமை...
அந்தப் பகுதியில் இருந்த விநாயகர் கோவிலில், குடமுழுக்கு விசேஷம் நடந்தது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நடேசனின் முயற்சியும், கைங்கர்யமும் பெருமளவில் இருந்தது.
"ஸ்வேதா... நம்ம அபரஞ்சி விநாயகருக்கு நாளைக்கு குடமுழுக்கு. ஒரு நடை வந்துட்டுப் போயேன்...' நேற்று மகளுக்கும், மகன் விக்னேஷுக்கும் போன் செய்து அழைத்துப் பார்த்தாள். இருவருமே முக்கிய வேலை இருப்பதாய் கூறி விட்டனர்.
கூடாரத்தில் இருந்த பெண்களும், ஆண்களும், புதுசு உடுத்தி, கோவிலுக்கு போவதும், வருவதுமாய் இருந்தனர். கோவில் பிரசாதத்தை வாங்கி வந்த அவர்களில், மூத்த பெண்மணி, உருண்டை பிடித்து தர, அத்தனை பேரும் அவளைச் சுற்றி அமர்ந்து, கையேந்தி கவளம் வாங்கி உண்டனர். அவர்களுக்குள், பேசிச் சிரிக்க, நிறைய விஷயமிருக்கும் போல; அடிக்கொரு தரம் சிரித்துக் கொண்டே இருந்தனர்.
""வாங்க ஸ்டீபன் சார்...'' என்ற நடசேன், மனைவியை அழைத்து,""பாமா... யாரு வந்திருக்காங்க பாரு...'' என்றார்.
சப்பாத்திக்கு மாவு பிசைந்த கையுடன் வெளியில் வந்தவள், அவருக்கு வணக்கம் தெரிவித்தாள். பக்கத்து ப்ளாட் ஸ்டீபன், நடேசனைப் போலவே சமூக சேவகரும் கூட. வேலைக்கு போகிற வேலை இல்லாததால், வெட்டி வேலையை, வேலையாக்கி கொள்பவர்.
""நடேசன் சார், நீங்க ஒண்ணும் கவலை படாதீங்க... நான் ஆடிட்டர் வரதன் மூலமா, இந்த இடம் யாருதுன்னு கண்டுபிடிச்சு, இப்படி ஒரு கும்பல், அவங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிற தகவலை, மெயில் பண்ணிட்டேன். பொறுத்திருங்க, ரெண்டொரு நாள்ல எல்லாம், "க்ளியர்' ஆயிடும்.''
காபியுடன் வந்த பாமாவுக்கு, "சுரீ'ரென்று சுட்டது; காபியும், அவர்களுடைய வார்த்தையும்.
நடேசன் பெருமிதமாய் அமர்ந்து இருந்தார். அன்னிய நாட்டின் அபகரிப்பில் இருந்து, தாய்நாட்டை மீட்ட மிதப்புடன்... பாமாவுக்குத் தான் அதிக வருத்தமாய் இருந்தது.
இரண்டாம் நாள் காலையில், போலீசும், நில
உரிமையாளரின் வக்கீலும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும், கூடார வாசிகளுக்கும் இடையே நீண்ட விவாதம் நடந்தது.
வாசலில் நின்ற ஸ்டீபனும், நடேசனும், கட்டை விரலை உயர்த்தி, வெற்றிச் செய்தியை பரிமாறிக் கொண்டனர்.
இறுதியில் கூடார வாசிகள், மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் அங்கிருந்து கிளம்பினர். பெண்களும், குழந்தைகளும், மிகுந்த கண்ணீருடன் ஆளுக்கொரு சாமான்களை கையில் பற்றியபடி, இலக்கின்றி நடந்து, கண்களில் இருந்து தேய்ந்து மறைந்தனர்.
ஸ்டீபனும், நடேசனும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு, நில உரிமையாளரின் வக்கீலிடம், நிலத்திற்கு வேலியிடும்படி, இலவச அறிவுரையை வாரி வழங்கி விட்டு வந்தனர்.
""பாமா... விடிஞ்சு இவ்வளவு நேரமாகுது... அந்த ஜன்னலை திறந்து வச்சா என்ன?'' எரிச்சலாய் கேட்டபடி, ஜன்னலை திறக்க முற்பட்டார் நடேசன்.
""திறக்க பிடிக்கல... நீங்க திறக்கறதும் பிடிக்கல...'' என்றாள். ஆச்சரியமாய் பார்த்தார் நடேசன்.
""பாவம்... அவங்க இருக்கறதுக்கு இடமில்லாம தானே, இங்கே வந்து இருந்தாங்க. வசதியான வாழ்க்கை மட்டுமே தெரிஞ்ச உங்களுக்கு, வாழ்வாதாரத்தை பத்தின கவலையில்ல... யாரோட இடத்துலயோ இருக்குற அவங்களை, குத்துயிரும் கொலை உயிருமா இங்கிருந்து விரட்டியடிச்சது, எப்படி மனிதாபிமான வேலையாகும்... இது தான் சமூக சேவையா?''
""ஓ... அதுதான் உன் கோபமா... இப்படிபட்டவங்களை தங்க விடறது தப்பு பாமா...''
""ஒத்துக்கறேன்... ஆனா, இவங்க அப்படியில்லைன்னு உங்களுக்கும் நல்லாத் தெரியும். இந்த பகுதியிலேயே, பல வருஷமா இருக்காங்கன்னு நீங்க தானே சொன்னீங்க... வீடில்லாத எல்லாருமே, தப்பானவங்களா இருக்க வேண்டிய அவசியமில்லையே... எல்லாரையும் நம்பறது எப்படி தப்போ, யாரையும் நம்பாம இருக்கறதும் தப்பு தான்.''
தேவையான விஷயத்துக்கு கூட, பாமா, இப்படி கோபங்கொண்டு பேசியதில்லை. நடேசனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
""சரி விடு... உனக்கு அதெல்லாம் புரியாது. போய், காபி கொண்டா.''
தன்னுடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்தி விட்டு பேசும் கணவனை, இன்னும் கோபமாய் பார்த்தாள்.
""ஆமா... எனக்கொன்னும் புரியாது... உங்களுக்குத்தான் எல்லாம் புரியும். ஆறு மாசத்துக்கு ஒருமுறை கூட, நம்ப புள்ளைங்க இந்தப் பக்கம் எட்டிப் பாக்குறது இல்லை. இவ்வளவு பெரிய வீடும், ஜன்னலும், தள்ளி நின்னு என்னை எளக்காரம் பண்றதை, நான் யார்ட்ட சொல்லி அழ முடியும்?
""இந்த நேரத்துல தான், எனக்கு அந்தக் குடும்பம் ரொம்பவும் வடிகாலா இருந்தது. சிரிப்பும், கூத்துமா அவங்க இருக்கறதை பார்க்கையிலே, நானும் அவங்கள்ல ஒருத்தியா என்னை கற்பனை பண்ணி, சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். இப்போ... ஜன்னலைத் திறந்தா தெரியற வெறுமை, என் முகத்தை கண்ணாடியில பாக்குற மாதிரி இருக்கு. நாம என்னத்தை அனுபவிச்சுட்டோம், அவங்களை விட...'' இயலாமையாய் சொன்னாள்.
""அதே தான்... அதே கோபந்தான் எனக்கும் பாமா... உட்கார வச்சு, பத்து பேருக்கு சாப்பாடு போடற வரும்படி இருக்கு... ஆனா, நம்பள தேடி வர யாருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும், ருசிச்சு, கழிச்சு வாழற அவங்களைப் பார்த்தா, எனக்கு கோபம் வந்தது... "நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதிச்சுத் தான் நிம்மதியா, சந்தோஷமா வாழ முடியும்டா நடேசா'ன்னு, எப்பவும் எங்கப்பா என்கிட்ட சொல்வாரு. எனக்கு அது கிடைக்கல... ஆனா, இது எதையுமே செய்யாம, அவங்களுக்கு அது கிடைக்குது... அத நினைச்சா தான், எனக்கு வெறுப்பா இருக்கு.''
கணவனை உற்றுப் பார்த்தாள் பாமா. சமூகசேவை என்று அனத்திக் கொண்டிருந்த கணவனுடைய உண்மை முகம், அப்பட்டமாய் அந்த நொடியில் புலப்பட்டது. அவளுடைய பார்வை வீச்சைத் தாங்காமல், தலை கவிழ்ந்தபடி எழுந்து போனார், நடேசன்.
அதன்பின், அவர் என்றைக்குமே ஜன்னலைத் திறக்க எத்தனிக்கவே இல்லை!
***